நெருக்கமாக இருந்தபோது எடுத்த ‘ஆபாச வீடியோவை காட்டி மிரட்டுகிறார்’ - பெண் போலீஸ் மீது டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு புகார்


நெருக்கமாக இருந்தபோது எடுத்த ‘ஆபாச வீடியோவை காட்டி மிரட்டுகிறார்’ - பெண் போலீஸ் மீது டிராவல்ஸ் உரிமையாளர் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 7 Aug 2019 4:45 AM IST (Updated: 6 Aug 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

‘இருவரும் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோவை வெளியிடப்போவதாக கூறி பெண் போலீஸ் மிரட்டுகிறார்’ என்று டிராவல்ஸ் அதிபர் பரபரப்பு புகார் மனு அளித்தார்.

கோவை,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது38). ஒண்டிப்புதூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது டிராவல்ஸ் நிறுவனத்தில் சூலூர் பள்ளப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண் வேலை பார்த்து வந்தார். அவர் மூலம் சூலூரை சேர்ந்த பெண் போலீஸ் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வந்தார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

நாங்கள் கடந்த 8 மாதமாக பழகி வந்தோம். இதுபற்றிய தகவல் என்னுடைய மனைவிக்கு தெரிய வந்ததால் குழந்தையுடன் அவர் பிரிந்து சென்றுவிட்டார். நான் பெண் போலீசுடன் நெருக்கமாக இருந்தேன். அவரை ஊட்டி, மைசூரு, திருநள்ளாறு, வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு அழைத்துச்சென்றேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, அத்திவரதர் தரிசனத்துக்கு பெண் போலீஸ் தனது போலீஸ் அடையாள அட்டையை காண்பித்து என்னை அத்திவரதரின் அருகில் தரிசனத்துக்கு அழைத்துச்சென்றார்.

எனது அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. நான் பெண் போலீசுடன் உல்லாசமாக இருந்தபோது எனது அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவை பெண் ஊழியர், பெண் போலீசிடம் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று பெண் போலீசும், அவரது தோழியும் என்னை மிரட்டினார்கள். வீடியோ வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்றனர்.நாங்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி யூடியூப்பில் வெளியிட்டனர். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் அந்த பெண் போலீஸ் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றிவிட்டனர். சீருடையுடன் இருந்துகொண்டு பல்வேறு இடங்களுக்கு சுற்றித்திரிந்ததால் அவருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டது.

அதன் பின்னரும் இன்னும் 2 ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதனை என்னுடைய மனைவி உள்ளிட்டவர்களிடம் கொடுக்கப்போவதாகவும், சமூகவலைத்தளத்தில் வெளியிடப்போவதாகவும் கூறி மிரட்டினார். இதுவரை பெண் போலீஸ் ரூ.3 லட்சம்வரை பறித்துக்கொண்டார். தற்போது அந்த பெண் போலீஸ் கோவையில் ஆயுதப்படையிலும், தோழி சென்னையிலும் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரை சந்தி்த்து புகார் மனு அளித்தார். சம்பவம் நடந்த பகுதி ஒண்டிப்புதூர் கோவை நகரத்தில் இருப்பதால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் வந்து புகார் மனு அளித்தார்.

ஆபாச வீடியோவை வைத்து மிரட்டும் பெண் போலீஸ் மீது டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் புகார் கூறிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story