நீர்வரத்து மேலும் அதிகரிப்பு: பவானிசாகர் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது


நீர்வரத்து மேலும் அதிகரிப்பு: பவானிசாகர் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்தது
x
தினத்தந்தி 7 Aug 2019 4:00 AM IST (Updated: 7 Aug 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து உள்ளது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 2½ லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை உள்ளது. தற்போது நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் காலை 9 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 872 கன அடி நீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 63.31 அடியாக இருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 94 கன அடியாக அதிகரித்தது . இதனால் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 65.40 அடியா னது. நேற்று மாலை 4 மணி அளவில் வினாடிக்கு 7 ஆயிரத்து 427 கன அடிநீர் வந்துகொண்டு இருந்தது. பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 200 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story