விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்


விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:15 PM GMT (Updated: 6 Aug 2019 8:04 PM GMT)

விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் இன்று தொடங்குகிறது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கூட்டு தொழில்கள் செய்து வரும் அனைவருக்கும் கிசான் கடன் அட்டை வழங்கும் முகாம் இன்று(புதன்கிழமை) தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த அட்டையை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விவசாயம் சார்ந்த பணிகளுக்கும், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலுக்கான தீவனம் போன்ற மூலப்பொருள் வாங்குவதற்கும் மற்றும் நடைமுறை மூலதனம் பெறவும் கடனுதவி பெறலாம்.

மேலும் வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த கூட்டுத்தொழில்களான கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி தொழில் செய்து வரும் அனைவரும் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் கிசான் கடன் அட்டை விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து அதை நேரடியாக வழங்கலாம். முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிகளால் பரிசீலினை செய்யப்பட்டு கடன் அட்டை திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பயனாளிகளுக்கு கடன் அட்டை 2 வாரங்களில் வழங்கப்படும்.

இதற்கான சிறப்பு முகாம் இன்று திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 9-ந்தேதி சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 13-ந்தேதி கண்ணங்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், 14-ந்தேதி எஸ்.புதூர் சமுதாய கூடத்திலும், 16-ந்தேதி காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 19-ந் தேதி மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 20-ந்தேதி சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 21-ந் தேதி தேவகோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், 22-ந் தேதி இளையான்குடி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், 24-ந்தேதி திருப்புவனம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்திலும், 26-ந் தேதி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், 27-ந்தேதி கல்லல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மாவட்ட முன்னோடி வங்கியின் ஒருங்கிணைப்பில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் கலந்து கொள்ள உள்ளது. எனவே அந்தந்த பகுதியில் விவசாயிகள் மற்றும் அதை சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Next Story