புதிய இடத்தில் செயல்படும் திருப்புவனம் வாரச்சந்தை; அறிவிப்பு பலகை வைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்


புதிய இடத்தில் செயல்படும் திருப்புவனம் வாரச்சந்தை; அறிவிப்பு பலகை வைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Aug 2019 4:00 AM IST (Updated: 7 Aug 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

புதிய இடத்தில் செயல்படும் திருப்புவனம் வாரச்சந்தை குறித்து பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்புவனம்,

திருப்புவனத்தில் இருந்து மேலூர் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் அருகில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் இந்த வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழிகள் சந்தை மற்றும் காய்கறி சந்தை நடைபெறும். புதன்கிழமை மாட்டுசந்தை மட்டும் நடைபெறும். இந்த வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் சந்தையில் மதுரை மாவட்டத்தில் இருந்து வரும் வியாபாரிகள் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி வந்து அவற்றை இந்த சந்தையில் சில்லறை விலைக்கு விற்பனை செய்வார்கள்.

இதேபோல் திருப்புவனத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மற்றும் கீரைகளை இந்த சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆடு வியாபாரிகள் ஆடுகளை மொத்தமாக கொண்டு வந்து இங்கு வைத்து விற்பனை செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த வாரச்சந்தை நடைபெறும் இடம் ஏற்கனவே மட்டை ஊருணி பகுதியாக இருந்தது. இந்த ஊருணியை மண்ணால் மூடி சமப்படுத்தி சந்தையாக உருவாக்கி கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி, சந்தை நடைபெற்ற இடத்தில் இருந்த ஊருணியை பேரூராட்சி நிர்வாகத்தினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இங்கு செயல்பட்ட வாரச்சந்தையை திருப்புவனத்தில் உள்ள அருப்புக்கோட்டைக்கு குடிநீரேற்றும் நிலையம் அருகில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று அங்கு வாரச்சந்தை நடைபெற்றது.

இதற்கிடையில் வெளி மாவட்டத்தில் இருந்து ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் சந்தை இடம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரியாமல் பழைய சந்தை நடைபெற்ற திருப்புவனம்-மேலூர் சாலையில் தாங்கள் கொண்டு வந்த ஆடு மற்றும் கோழிகளை விற்பனை செய்தனர். மேலும் புதிதாக சந்தை இடம் மாறியது குறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story