பெரம்பலூர்- தலைவாசல் இடையே தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்


பெரம்பலூர்- தலைவாசல் இடையே தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Aug 2019 10:15 PM GMT (Updated: 6 Aug 2019 8:21 PM GMT)

பெரம்பலூரில் இருந்து தலைவாசல் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று பெரம்பலூர் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பெரம்பலூர்,

தஞ்சையில் இருந்து அரியலூர், பெரம்பலூர், வீரகனூர், ஆத்தூர், வாழப்பாடி வழியாக சேலத்திற்கும், எதிர் திசையில் சேலத்தில் இருந்து தஞ்சாவூருக்கும் விரைவு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் தினமும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். பெரம்பலூரில் இருந்து வீரகனூர், தலைவாசல் வழியாக சேலம் சென்று வரும் வாகனங்களின் போக்குவரத்தும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. “சிமெண்டு சிட்டி”என அழைக்கப்படும் அரியலூரில் இருந்து சிமெண்டு மூட்டைகளை லாரிகளில் ஏற்றி சேலம் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது. சிமெண்டு தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருள் சேலத்தில் இருந்து டேங்கர் லாரிகளில் அரியலூருக்கு கொண்டுவரப்படுகிறது. அதேபோல ஆத்தூர் பகுதியில் விளையும் பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, கரும்பு, காய்கறிகள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு எடுத்துவரப்படுகின்றன.

ரூ.160 கோடியில்...

பெரம்பலூரில் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், கலைக்கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் என கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளன. தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 5 ஊரை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், கல்லூரி மாணவ- மாணவிகள் பெரம்பலூர்- வீரகனூர்- தலைவாசல் சாலையில் அதிகம் பயணம் செய்து வருகின்றனர். மேலும் பெரம்பலூர் நகர வர்த்தகர்கள் தங்களது வியாபார நிமித்தமாக ஈரோடு, திருப்பூர், கோவை, ஊட்டி மற்றும் பல நகரங்களுக்கு செல்ல இந்த பிரதான சாலையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக ஓசூர், பெங்களூரு செல்வதற்கும் மற்றும் ஏற்காடு செல்வதற்கும் பெரம்பலூர்- தலைவாசல் இடையே உள்ள 44 கிலோ மீட்டர் தூர சாலையை பெரம்பலூர், அரியலூரை சேர்ந்த வாகன உரிமையாளர்கள், வாகனங்களை இயக்குபவர்கள் பயன்படுத்திவருகின்றனர். இந்த சாலை தேசிய நெடுஞ்சாலையாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த சாலை வாகன போக்குவரத்துக்கு பெரிதும் பயன்பட்டாலும், பல இடங்களில் குறுகலாகவே உள்ளது. பெரம்பலூர்- தஞ்சை- மானாமதுரை சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டு ரூ.160 கோடி செலவில் பெரம்பலூர்- மானாமதுரை சாலையில் தஞ்சாவூர்வரை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ளது.

அகலப்படுத்தும் பணி

அதேபோல பெரம்பலூர்- தலைவாசல் சலையை கடலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை-சேலம் வழியாக கொச்சினுக்கு செல்லும் நான்கு வழிச்சாலையுடன் இணைக்கும் சாலையை போர்க்கால அடிப்படையில் விரிவாக்கம் செய்து, அகலப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்தினால் போக்குவரத்து, வேளாண்மை, வணிகம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் துணையாக இருக்கும். ஆகவே பெரம்பலூர்- தலைவாசல் தேசிய சாலையை மத்திய அரசு போதிய நிதிஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் அகலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பெரம்பலூர் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Next Story