காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து எதிரொலி: திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 8:51 PM GMT)

காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி,

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய, சத்திரம் பஸ் நிலையங்கள், ஜங்ஷன் ரெயில் நிலையத்திலும், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை செய்து அனுப்புகின்றனர்.

தண்டவாளத்தில் ரோந்து பணியை மேற்கொள்ள ரெயில்வே போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவிரி, கொள்ளிடம் ரெயில்வே பாலம், தென்னூர் ஓ பாலம் உள்ளிட்ட முக்கிய ரெயில்வே பாலங்களில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நடைமேடையில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாநகர, மாவட்ட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மண்டலம் வாரியாக 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 8 மாவட்டங்களுக்கும், திருச்சி மாநகரத்திற்கும் சிறப்பு அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தார். கண்டோன்மெண்ட்டில் உள்ள போலீஸ் கிளப்பில் தங்கிய அவர் நேற்று காலை திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஐ.ஜி. வரதராஜூ உடன் கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ் ஆலோசனை மேற்கொண்டார். மத்திய மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று கமிஷனர் அமல்ராஜ் உடன் அவர் ஆலோசனை நடத்தினார். அதன்பின் மாநகர பகுதியில் தனியாக சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். ஆன்மிக வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பு குறித்தும் பார்வையிட்டார்.

திருச்சி மத்திய மண்டலத்தில் பஸ், ரெயில் நிலையங்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பதற்றமான இடங்கள் உள்பட மொத்தம் 109 இடங்களில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து கைது செய்ய போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சிறப்பு அதிகாரியான கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார்யாதவ் இன்றும் (புதன்கிழமை) பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story