சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன்மூலம் காஷ்மீரில் 70 ஆண்டுகள் இல்லாத முன்னேற்றத்தை மத்திய அரசு கொண்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன்மூலம் காஷ்மீரில் 70 ஆண்டுகள் இல்லாத முன்னேற்றத்தை மத்திய அரசு கொண்டு வரும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 6 Aug 2019 11:00 PM GMT (Updated: 6 Aug 2019 9:15 PM GMT)

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன்மூலம் காஷ்மீர் மாநிலத்தில் 70 ஆண்டுகள் இல்லாத முன்னேற்றத்தை மத்திய அரசு கொண்டு வரும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதா நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இந்த நடவடிக்கையை துணிச்சலுடன் எடுத்த பிரதமர் மோடிக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 70 ஆண்டு காலம் இல்லாத முன்னேற்றத்தை, இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய அரசு கொண்டு வரும்.

மேலும் அங்குள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறக்கூடாது என்பதற்காக பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

திணிப்பு நடவடிக்கை இல்லை

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் மூலம் இந்திய மக்களுடன் இணைந்து வாழும் சூழல் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் காஷ்மீர் மக்களின் கனவு நனவாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் இதனை சிலர் திணிப்பு நடவடிக்கை என கூறுகின்றனர். ஆனால் இது, நோய் தீர்வதற்கு மருந்து சாப்பிடுவது போல் ஆகும். இது திணிப்பு நடவடிக்கை இல்லை.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூடவேண்டும் என வைகோ கூறுகிறார். இதன் மூலம் தமிழகம் மின்சாரத்திற்கு பிற மாநிலங்களில் பிச்சையெடுக்க வேண்டும் என விரும்புவதாக தெரிகிறது.

தமிழகத்திற்கு பொருந்தாது

வைகோ நாடாளுமன்றத்தில் பேசும் விஷயம் ஏற்புடையதல்ல. நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காங்கிரஸ் கட்சி தான் காரணம். குமரி மாவட்டத்திற்கு பாலங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என மக்களிடம் வாக்குறுதி அளித்தவர், தற்போது சாலைபோக்குவரத்து மந்திரியிடம் பாலம் வேண்டும் என கூறி வருகிறார்.

மேலும் சட்டத்திருத்தம் என்பது காலத்தின் மாற்றத்துக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் ஏற்றவாறு மாற்ற வேண்டும். அப்படி எடுக்கப்பட்ட மாற்றம் தான் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது, பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், பார்வையாளர் தேவ், நகர தலைவர் நாகராஜன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story