பாரிமுனையில் லாட்ஜில் தங்கியிருந்த வாலிபரிடம் ரூ.60 லட்சம் சிக்கியது ஹவாலா பணமா? அதிகாரிகள் விசாரணை
பாரிமுனையில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த வாலிபரிடமிருந்து ரூ.60 லட்சம் மற்றும் 2 கிலோ வெள்ளி சிக்கியது. ஹவாலா பணமா? என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிராட்வே,
சென்னை முழுவதும் சுதந்திர தின விழாவையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், பாரிமுனை பகுதியில் உள்ள அனைத்து லாட்ஜ்களில் நேற்று பூக்கடை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மண்ணடி தம்புச்செட்டி தெருவில் உள்ள மெட்ரோ பேலஸ் என்ற லாட்ஜில் முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் காதர் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள அறை ஒன்றில் சுமார் ரூ.60 லட்சம் மற்றும் 2 கிலோ வெள்ளியுடன் வாலிபர் ஒருவர் இருந்தது தெரியவந்தது.
பணம்-வெள்ளி பறிமுதல்
மேலும் அவற்றிற்கான முறையான ஆவணங்கள் இல்லாததாலும், லாட்ஜில் இருந்த வாலிபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்ததாலும் அவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், கேரள மாநிலம் அருவித்துறா, கட்டொலியில் பகுதியை சேர்ந்த இலியாஸ் (வயது 35) என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வாலிபரிடம் விசாரணை
பின்னர் போலீசார், இலியாஸ் மற்றும் பறிமுதல் செய்த பணம் மற்றும் வெள்ளியை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணமா? என வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்லும் பாரிமுனை பகுதியில் லாட்ஜில் ரூ.60 லட்சம் மற்றும் 2 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story