கோவை அருகே அன்னூரில், லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்ற 13 பேர் கைது - போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அதிரடி நடவடிக்கை
கோவை அருகே அன்னூரில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்த 13 பேரை கைது செயதனர்.
அன்னூர்,
லாட்டரி சீட்டுகளை தயாரிக்க, விற்க தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலம் உள்பட வெளிமாநிலங்களில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகளின் பெயரில் ஒரு கும்பல் போலியாக லாட்டரி சீட்டுகளை அச்சடித்துள்ளது.
மேலும் அந்த கும்பல் வெளிமாநிலங்களில் நடத்தப்படும் குலுக்கல் எண்களை ஆன்லைன் மூலம் அறிந்து கடைசி 3 எண்களுக்கு பரிசு வழங்குவதாக கூறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளது. இந்த கும்பல் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் செயல்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே அவர் தனது தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் மற்றும் 4 போலீசார் ஒரு வாடகை காரில் அன்னூர் செல்லப்பம் பாளையத்துக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்குள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள வீட்டில் குடோன் போல் அமைத்து லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே அந்த வீட்டுக்குள் லாட்டரி சீட்டு வாங்குவது போல் சீருடை அணியாத போலீசார் நுழைந்தனர்.அப்போது லாட்டரி சீட்டு பரிசு அறிவிப்பு நேரம் என்பதால் முடிவுகளை தெரிந்து கொள்ள 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
இதில், செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜூக்கு சொந்தமான வீட்டில் அன்னூரைச் சேர்ந்த ஹரி என்பவர் தலைமையில் லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்றது தெரிய வந்தது.
உடனே போலீசார் அங்கிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், 10 மோட்டார் சைக்கிள்கள், 1 டெம்போ வேன், மேஜை நாற்காலிகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இதுதவிர தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், 3 வயர்லெஸ் பிரிண்டர்கள், 22 செல்போன்கள், 2 கால்குலேட்டர்கள், 10 பேப்பர் பில் ரோல்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் அங்கு லாட்டரி சீட்டு அச்சடித்து விற்பனை செய்த துரைசாமி, ஜீவா, ரமேஷ், நவீன், செந்தில், செந்தில்குமார், வெள்ளியங்கிரி, பழனிசாமி, வேலுசாமி, தர்மன், அருள்பிரகாசம், பொன்ராஜ், மரியலூயிஸ் ஆகிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கும்பல் தலைவன் ஹரி, சுந்தர்ராஜ், சாமிநாதன், பிரபு ஆகிய 4பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story