கர்நாடகத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பு பொதுமக்களின் இயல்புவாழ்க்கை கடும் பாதிப்பு மீட்பு பணிகள் தீவிரம்; பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழையால் கர்நாடகத்தில் 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
தென்மேற்கு பருவமழையையொட்டி மராட்டிய மாநிலத்தில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. மும்பை நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அந்த மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. கர்நாடகத்தின் எல்லை பகுதியான மராட்டியத்தில் அமைந்துள்ள கொய்னா அணையில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு சுமார் 3 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், வட கர்நாடகத்தில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பெலகாவி, விஜயாப்புரா, யாதகிரி, பாகல்கோட்டை, ராய்ச்சூர், தார்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் பாய்ந்தோடும் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் அந்த மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையும் பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் அந்த ஆற்றின் படுகையில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள், கோவில்களை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
சாலையில் திடீர் விரிசல்
பெலகாவி மாவட்டம் பைலஓங்கலா தாலுகாவில் உள்ள ஒசக்கோட்டையில் 25 வயது இளைஞர் ஒருவர், வீட்டு சுவர் இடிந்து விழுந்து மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். மார்கண்டேய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோகாக், ஹுக்கேரி பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு வீடுகளில் மழைநீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பெலகாவி மாவட்டம் நிப்பானி பகுதியில் பெலகாவி-புனே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று விரிசல் விழுந்துள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அந்த சாலையை தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பெலகாவி வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 4-ல் மழை நீர் அதிகளவில் தேங்கியதால், அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. கர்நாடகத்தில் இருந்து மும்பை செல்லும் அந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மாற்று சாலையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.
போக்குவரத்து ரத்து
கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள அலமட்டி அணை முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதால், அந்த அணையில் இருந்து வினாடிக்கு 3,16,022 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் அலமட்டி அணையின் படுகையில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, நாராயணபுரா அணையில் இருந்தும் வினாடிக்கு 3,05,506 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு சுமார் 6 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மழை வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ரப்பர் படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளில் மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், தனார்வலர்கள் என சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். மராட்டியம், வடகர்நாடகத்தில் தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, பெலகாவி-புனே சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெலகாவி வழியாக புனே மற்றும் மும்பைக்கு செல்லும் கர்நாடக அரசு பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக அந்த சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. அந்த வாகனங்கள் மீண்டும் திரும்பி சென்றன.
உணவு மையங்கள்
மராட்டியம் செல்பவர்கள் பெலகாவி சாலையை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி பொதுமக்களுக்கு அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருஷ்ணா ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வருவதால், பசவசாகர் அணையின் மொத்தம் உள்ள 31 மதகுகளில் 21 மதகுகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்காமல் வடகர்நாடகத்தில் ரெயில் பாதைகள் தண்ணீரில் மிதப்பதால், லொன்டா-டினய் இடையே ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அங்கு உணவு வழங்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில கிராமங்களில் உணவு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வடகர்நாடகத்தில் உள்ள கட்டப்பிரபா, மல்லப்பிரபா, வேதகங்கா, தூத்கங்கா போன்ற அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆறுகளின் படுகையில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெலகாவி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் சாகாப்பூரில் 13 வீடுகள் இடிந்துள்ளன. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கானாப்பூர் பகுதியில் கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஏராளமான பாலங்கள் மூழ்கி உள்ளன.
கடலோர மாவட்டங்கள்...
இதேபோல, கர்நாடக கடலோர மாவட்டங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுள்ளியா, பெல்தங்கடி, கடபா ஆகிய தாலுகாக்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கொட்டி வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. மங்களூரு நகரில் விட்டு, விட்டு மழை பெய்தது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குமாரதாரா, நேத்ராவதி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் குமாரதாரா ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் பெய்து வரும் மழை குறித்து கலெக்டர் சசிகாந்த் செந்தில் கூறுகையில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். தட்சிண கன்னடா மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றார்.
இதேபோல உடுப்பி, உத்தரகன்னடா மாவட்டங்களிலும் விடிய, விடிய பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களிலும் அரபிக்கடலில் கடல் அலையின் சீற்றமும் அதிகமாக இருந்தது. 3 மாவட்டங்களிலும் பெய்து வரும் தொடர் கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மங்களூருவில் இருந்து மும்பை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண்ணை அகற்றும் பணி நடந்தது. இதேபோல, சிராடி மலைப்பாதையில் நேற்று மண்சரிவு ஏற்பட்டது. இதனால், பெங்களூரு-மங்களூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் கிடக்கும் மண்ணை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது
குடகு மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி ஆறு உற்பத்தியாகும் பாகமண்டலா, அய்யங்கேரி பகுதிகளில் விடிய, விடிய பலத்த மழை கொட்டி வருகிறது. நேற்று முன்தினம் மடிகேரி-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. பாகமண்டலா பகுதியில் உள்ள பங்கண்டேஸ்வரர் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்துகொண்டது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள மக்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். குடகு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாகமண்டலா பகுதியில் பெய்து வரும் மழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல, மலை நாடுகளான சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சிக்கமகளூருவில் துங்கா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிவமொக்கா காஜனூரில் உள்ள துங்கா அணை முழுகொள்ளளவையும் எட்டியதால், அணையில் இருந்து 20 மதகுகள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள ஜோக் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
13 மாவட்டங்களுக்கு விடுமுறை
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள கல்லத்தி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை அந்த அருவியில் தண்ணீர் குறைவாக தான் விழுந்தது. இதனால் அந்த அருவியையொட்டி அமைந்துள்ள வீரபத்ரேஷ்வரா கோவிலுக்கு பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் திடீரென்று அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 10-க்கும் மேற்பட்டோர் அதில் சிக்கிக் கொண்டனர். இதன்காரணமாக அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
மேலும் ஹாசன் மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உப்பள்ளி-தார்வார், சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, பெலகாவி, பாகல்கோட்டை, ஹாசன், யாதகிரி, விஜயாப்புரா, ராய்ச்சூர் ஆகிய 13 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் அந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 13 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம்
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொட்டும் மழையிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெலகாவி உள்ளிட்ட மழை பெய்யும் மாவட்டங்களில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் செய்து வருகிறது.
பெலகாவியில் 74 கிராமங்களுக்கு ‘ரெட் அலார்ட்’
வடகர்நாடக மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணா ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வடகர்நாடகத்தில் 6 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பெலகாவி மாவட்டத்தில் அடுத்த சில நாட்கள் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில் மட்டும் 74 கிராமங்களுக்கு ‘ரெட் அலார்ட்’ விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, மைசூரு, குடகு ஆகிய மாவட்டங்களிலும் ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ‘ரெட் அலார்ட்’ விடுக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story