மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நாளை முற்றுகை போராட்டம்


மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நாளை முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 5:03 PM GMT)

மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நாளை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.

திருச்சி,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் நிஜாம் மைதீன், அப்துல் ஹமீது, உமர்பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, நவவீ, பொருளாளர் அபுதாகீர், தொழிற்சங்க மாநில தலைவர் பாரூக் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஹஸ்ஸான், பொதுச்செயலாளர் நியமத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது:–

மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் 2–வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதா அரசு, அதிகார வெறியுடன் மக்களவையில் இதுவரை இல்லாத வகையில் 30 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது.

கூட்டாட்சி மற்றும் குற்றவியல் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை மீறும் என்.ஐ.ஏ. திருத்த சட்டம், அடிப்படை உரிமைகளை பறிக்கும் யு.ஏ.பி.ஏ. சட்ட திருத்தம், சிறுபான்மை மக்களின் சிவில் பிரச்சினையை கிரிமினல் குற்றமாக்கும் முத்தலாக் சட்ட திருத்தம் உள்ளிட்டவைகளுடன் காஷ்மீர் மாநிலத்தின் சுயாட்சியை பறிக்கும் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை நீக்கம் செய்ததோடு, காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றி உள்ளது. இது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எதிர் நோக்கி இருக்கும் இருண்டகாலத்தை பறைசாற்றுவதாக உள்ளது. மத்திய அரசின் இத்தகைய ஜனநாயக போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்துத்துவா சக்திகளை திருப்திப்படுத்தும் போக்கை கடைபிடித்து வரும் பாரதீய ஜனதா அரசு, இந்த விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்பத்திலேயே விவாதமாக மேற்கொள்ளாமல், கடைசி நேரத்தில் யாருடைய கருத்துகளுக்கும் செவி சாய்க்காமல், ஜனாதிபதி உத்தரவின் பேரில் காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை பறித்துள்ளது. இதற்கு சில மதசார்பற்ற கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளது வியப்பாக உள்ளது.

எனவே, மத்திய பாரதீய ஜனதா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து நாளை(வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகை போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்துகிறது. சென்னையில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடக்கும். அதுபோல அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story