நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்


நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:30 AM IST (Updated: 7 Aug 2019 10:08 PM IST)
t-max-icont-min-icon

நிலுவையில் உள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,


திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனி பகுதியில் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு நலவாரிய அலுவலகத்தை நேற்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது, கலெக்டர் தலைமையில் செயல்படும் நலவாரிய கண்காணிப்பு குழு கூட்டத்தை மாதந்தோறும் கூட்ட வேண்டும். இயற்கை மரணம், திருமணம், மகப்பேறு உதவிகள் தொடர்பாக நிலுவையில் உள்ள தொழிலாளர்களின் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டுமானம் உள்ளிட்ட 17 முறைசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கும் சி.ஐ.டி.யு. பிரதிநிதி உள்ளிட்ட முத்தரப்பு குழுக்கள் அமைக்கவேண்டும். விண்ணப்பித்த 3 மாதத்திற்குள் பணப்பயன்கள் வழங்கப்படவேண்டும். நலவாரிய செயல்பாடுகள் குறித்து அனைத்து மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு விவாதித்து ஒரே சீரான நடைமுறை மாநிலம் முழுவதும் அமலாக்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.


போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.கே. ராமர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் வி.கே. ராஜேந்திரன், தலைவர் சேது, பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் வீர முத்து,சுமைப்பணி சங்க மாவட்ட தலைவர் குணசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். போராட்ட முடிவில் சங்க நிர்வாகிகள் உதவி தொழிலாளர் ஆணையரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Next Story