தாராபுரத்தில் அனுமதியின்றி மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்


தாராபுரத்தில் அனுமதியின்றி மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Aug 2019 10:30 PM GMT (Updated: 7 Aug 2019 5:28 PM GMT)

தாராபுரத்தில் அனுமதியின்றி மண் ஏற்றிச்சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாராபுரம்,

கனிமவளத்துறை உதவி இயக்குனர் உத்தரவின் பேரில், கனிமவளத்துறை வருவாய் ஆய்வாளர்கள் தாரா புரம் பகுதியில் வாகன சோதனை நடத்தினார்கள். புறவழிச்சாலையில் அலங்கியம் பிரிவு அடுத்துள்ள பகுதியில், வாகனச்சோதனை நடைபெற்றபோது, அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது உப்பாறு அணையில் இருந்து எடுக்கப்பட்ட மண், அனுமதியின்றி விற்பனைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

அதையடுத்து அதிகாரிகள் 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனர். இது குறித்து கனிமவளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

உப்பாறு அணையிலிருந்து எடுக்கப்படும் மண், விளைநிலங்களுக்காக விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மண் முறையாக கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து வருகிறோம். சிக்கினாபுரத்தில் உள்ள விவசாயி ஒருவரின் விளை நிலத்திற்கு, அணை மண் தேவைப்படுவதாக, அனுமதி பெற்று லாரியில் மண் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்த மண்ணை முறையாக பயன்படுத்தாமல், விற்பனைக்கு கொண்டு செல்வதை, அதிகாரிகள் கண்டறிந்து தடுத்து நிறுத்தி உள்ளார்கள். அனுமதி பெற்ற இடத்தை தவிர வேறு இடத்திற்கு மண்ணை கொண்டு செல்வது குற்றமாகும். அவ்வாறு கொண்டு சென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மூடாக்கு போடாமல் கொண்டு செல்லும் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story