கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை, நொய்யல் ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு


கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை, நொய்யல் ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 7 Aug 2019 11:30 PM GMT (Updated: 7 Aug 2019 6:53 PM GMT)

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக காலையில் இருந்து மாலை வரை அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சில இடங்களில் காலையில் இருந்து மழை தூறிக்கொண்டே இருந்தது.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். சாலையில் உள்ள குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் குழி இருப்பது தெரியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டுனர்கள் குழிக்குள் சிக்கி தடுமாறியபடி சென்றனர். சிலர் கீழே விழுந்து காயத்துடன் தப்பினார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி கோவை, திருப்பூர் வழியாக நொய்யல் ஆறு ஓடுகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று 3-வது நாளாக நொய்யல் ஆற்றில் இருகரை களையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது..

இந்த ஆறு மூலம் நீராதாரம் பெற்று வரும் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், அந்த குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அத்துடன் ஆற்றில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன.

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கோவை குற்றால அருவியிலும் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு சென்ற சுற்றுலா பயணிகள் சாடிவயல் சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மழை காரணமாக சாடிவயல் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே புதிய அருவிகள் தோன்றி உள்ளன. அவை பார்ப்பதற்கு வெள்ளிக்கம்பியை உருக்கி விட்டது போல் அழகாக காட்சி அளிக்கிறது. சாடிவயல் வரை சென்றும் கோவை குற்றால அருவிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஆனாலும் சில சுற்றுலா பயணிகள் அருவிகளை பார்த்து ரசித்துவிட்டு செல்கிறார்கள்.

கோவை ராம்நகரில் மழை காரணமாக மரம் முறிந்து அங்கு நிறுத்தி இருந்த ஒரு கார் மீது விழுந்தது. இதனால் அந்த கார் சேதமானது. அது போன்று சில இடங்களிலும் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முறிந்த மரங்களை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த ஊழியர்கள் வெட்டி அகற்றினார்கள்.

கோவையில் நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால், கோவையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story