மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார்? என்பதில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்


மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார்? என்பதில் பள்ளி மாணவர்கள் பயங்கர மோதல்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:15 AM IST (Updated: 8 Aug 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார்? என்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் இடையே நேற்று மாலை பயங்கர மோதல் ஏற்பட்டது.

திருச்சி,

சென்னையில் கல்லூரி மாணவர்கள் ‘ரூட் தலை’ பிரச்சினை, திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்குள் ‘ரூட் பெஞ்ச்’ பிரச்சினையில் மோதல் என்று மாணவர்கள் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு பரபரப்பு உருவாகி வந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பள்ளி மாணவர்கள் இடையே மாணவிகள் மனதில் முதலில் இடம் பிடிப்பது யார்? என்று ‘ரூட் மாணவிகள்’ பிரச்சினையாக உருவெடுத்து, திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் நடந்தது.

அதன்விரவரம் வருமாறு:-

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் மாலை சத்திரத்தில் இருந்து பஸ்சில் திருச்சி மத்திய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து வேறு பஸ்சில் பயணித்து தங்கள் வீடுகளுக்கு செல்வது வழக்கம். இதுபோல திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் அருகே உள்ள பள்ளி ஒன்றின் மாணவர்களும் பள்ளி முடிந்ததும், மாலையில் மத்திய பஸ் நிலையத்திற்கு வந்து தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள்.

இரு பள்ளியின் மாணவர்களும் பஸ் நிலையத்தில் ஒன்றாக சேர்ந்து பயணிப்பது வழக்கம். இதுபோல், பல்வேறு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் இங்கு வருவார்கள். அப்போது மாணவர்கள், தங்கள் பஸ்சில் வரும் மாணவிகளிடம் பேச்சு கொடுத்து, அவர்களின் மனதில் இடம்பிடித்து அவர்களுடன் நட்பாக பழகுவார்கள்.

இந்தநிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் இரு பள்ளிகளின் மாணவர்களும், பஸ் நிலைய சைக்கிள் நிறுத்தம் அருகில் டவுன் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது மாணவிகள் சிலர் அங்கு வந்ததும், அவர்களிடம் முதலில் பேச்சுகொடுத்து மனதில் இடம் பிடிப்பது யார்? என்ற போட்டி ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே இரு பள்ளிகளின் மாணவர்களும் கோஷ்டியாக சேர்ந்து கொண்டு கைகளால் ஒருவரையொருவர் பயங்கரமாக தாக்கி மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைப்பார்த்த பயணிகள் திருச்சி கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பஸ் நிலையத்தில் நின்ற இதர மாணவர்களையும், மாணவிகளையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். திருச்சியில் பள்ளி மாணவர்கள் இடையே மாணவிகளுக்காக மோதலில் ஈடுபட்ட சம்பவம் இதுவே முதல் முறை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story