பள்ளி இடத்தில் ஆக்கிரமிப்பு: ஜெபக்கூடத்தை அகற்ற கோரி மாணவர்களின் பெற்றோர் மறியல்


பள்ளி இடத்தில் ஆக்கிரமிப்பு: ஜெபக்கூடத்தை அகற்ற கோரி மாணவர்களின் பெற்றோர் மறியல்
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 7:33 PM GMT)

துறையூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஜெபக்கூடத்தை அகற்ற கோரி மாணவர்களின் பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

துறையூர்,

துறையூரை அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கிறிஸ்தவர்கள் சிலர் சிலுவை பீடம் அமைத்து, ஓலையால் ஜெபக்கூடம் அமைத்து இருப்பதாக புகார் கூறப்பட்டது.

இதை அகற்றக்கோரி பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்லின் சுகுணா பள்ளி கல்வித்துறைக்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கும் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்தநிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள ஜெபக்கூடத்தை அகற்றக்கோரி பள்ளி மாணவ- மாணவிகளின் பெற்றோர் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தாசில்தார் சத்யநாராயணன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அவர்கள் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து பள்ளி இடத்தை அளந்து பார்த்த போது, அந்த ஜெபக்கூடம் பள்ளி இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. உடனே இதுபற்றி மாவட்ட கலெக்டருக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். அவருடைய உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Next Story