ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்த போது மீட்பு: தஞ்சையில் பெற்றோரை காணாமல் தவிக்கும் 5 வயது சிறுவன்


ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்த போது மீட்பு: தஞ்சையில் பெற்றோரை காணாமல் தவிக்கும் 5 வயது சிறுவன்
x
தினத்தந்தி 8 Aug 2019 4:45 AM IST (Updated: 8 Aug 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையத்தில் பிச்சை எடுத்த போது மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் பெற்றோரை காணாமல் தஞ்சையில் தவித்து வருகிறான். அவனை பற்றி தெரிந்தால் தொடர்பு கொள்ளுமாறு குழந்தைகள் நலக்குழுமம் அழைப்பு விடுத்துள்ளது.

தஞ்சாவூர்,

கரூர் ரெயில் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 குழந்தைகள் பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பதாக கரூர் சைல்டுலைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சைல்டுலைன் அமைப்பினர் 2 சிறுவன், 2 சிறுமிகளை மீட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் தஞ்சையை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து 4 பேரும் தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பேரில் சிறுவர், சிறுமிகளிடம் நலக்குழுவினர் விசாரித்த போது அவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. அதன் பேரில் மதுரை விளாச்சேரி மொட்டலை கலைஞர் நகரில் உள்ள குழந்தையின் தந்தையான கோச்சடைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் அவர் தஞ்சை வந்தார். அப்போது அவர் 4 குழந்தைகளில் 3 குழந்தைகள் தன்னுடையது என்றும் ஒரு குழந்தை யார் என்று தெரியாது எனவும் தெரிவித்தார். மேலும் எனது மனைவி பரமேஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு சென்றதாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த குழந்தைகளிடம் விசாரித்த போது தனது தாய் பொள்ளாச்சிக்கு அழைத்துச்சென்றதாகவும், அங்கு பஸ் நிலையத்தில் பெற்றோரை காணாது 5 வயதான தருண் அழுது கொண்டிருந்தான். அவரை எனது தாய் திருப்பூர் மற்றும் கரூருக்கு அழைத்துச்சென்றதாக தெரிவித்தனர். இதையடுத்து கோச்சடையின் 2 மகன்களையும், ஒரு மகளையும் அவரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது இன்னொரு சிறுவனான 5 வயது தருண் தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக்குழுவின் பாதுகாப்பில் உள்ளான். அவன் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இங்கு உள்ளான். பெற்றோரை காணாது தவிப்புடன் உள்ளான்.

இது குறித்து குழந்தைகள் நலக்குழும தலைவர் திலகவதி, உறுப்பினர்கள் நிஷாத்அப்ஜா, ராமமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராஜன் ஆகியோர் கூறுகையில், “சிறுவன் எந்த ஊரை சேர்ந்தவன் என அவனுக்கு சொல்ல தெரியவில்லை. தந்தை பெயர் சுரேஷ் என்றும் தாயார் பெயர் சித்ரா என்றும் தனக்கு ராகவா என்ற தம்பி மட்டும் உள்ளான் என தெரிவிக்கிறான். பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து அழைத்து வந்ததால் அந்த பகுதியை சேர்ந்தவனாக இருக்கலாம் என கருதுகிறோம். மேலும் இந்த குழந்தையை அழைத்துச்சென்ற பரமேஸ்வரி கிடைத்தால் மேலும் தகவல் தெரியவரும். இந்த சிறுவனின் பெற்றோர் அல்லது இவனை பற்றி யாராவது தெரிய வந்தால் தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக் குழுமம் (04362-237012, 9842692223) மற்றும் சைல்டு அமைப்பினை தொடர்பு கொள்ளலாம்”என்றனர்.

Next Story