மேகதாது அணை கட்ட வல்லுனர் குழு மறுத்தது வரவேற்கத்தக்கது காவிரி உரிமை மீட்புக்குழு அறிக்கை


மேகதாது அணை கட்ட வல்லுனர் குழு மறுத்தது வரவேற்கத்தக்கது காவிரி உரிமை மீட்புக்குழு அறிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2019 10:30 PM GMT (Updated: 7 Aug 2019 8:03 PM GMT)

மேகதாது அணை கட்ட வல்லுனர் குழு மறுத்தது வரவேற்கத்தக்கது என்று காவிரி உரிமை மீட்புக்குழு அறிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூர்,

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டி 66 டி.எம்.சி. தண்ணீர் தேக்கும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை கேட்டிருந்தது. கர்நாடக அரசு அனுப்பிய அந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒரு வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்தது.

அந்த குழு, கர்நாடக அரசு குறிப்பிடும் இடங்களில் மேகதாது அணை கட்டினால் 4,996 எக்டேருக்கு மேல் வனப்பகுதிக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், பல்வேறு உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு அழிவு ஏற்படும் என்றும், மேலும் சில முக்கிய காரணங்களை கூறியும் கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைகளை ஏற்க வேண்டியதில்லை. மேகதாது அணை கட்ட அனுமதி தர தேவை இல்லை என பரிந்துரை செய்துள்ளது.

வரவேற்கத்தக்கது

மேகதாது அணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து கொடுத்த விவரங்களை இந்த குழு ஆராய்ந்ததையும் அப்பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்கள். வல்லுனர் குழு அளித்த அறிக்கையை காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வரவேற்று பாராட்டுகிறேன்.

அந்த பரிந்துரையில், அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகளையெல்லாம் சொல்லிவிட்டு தமிழ்நாடும், கர்நாடகாவும் கூடிப் பேசி இணக்கமான முடிவுக்கு வர வேண்டும் என கூறியிருப்பது வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

நிரந்தர தடையாணை

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் ஒரு சொட்டு தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது. எனவே அணை கட்டக்கூடாது என்று காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்களும், கட்சிகளும் போராடி வந்துள்ளன. இந்த நிலையில் மேற்படி வல்லுனர் குழுவின் அறிக்கை தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.

இந்த அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், மத்திய அரசும் அப்படியே ஏற்று கர்நாடகம், காவிரியின் குறுக்கே மேகதாதுவிலோ மற்ற இடங்களிலோ அணை கட்ட கூடாது என நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். தமிழக அரசும் தொடர்ந்து விழிப்புடன் இருந்து கர்நாடகம் அணை கட்ட மத்திய அரசு நிரந்தர தடையாணை விதிக்க வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story