ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 70 பேரை கோர்ட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்ற போலீசார்


ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 70 பேரை கோர்ட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்ற போலீசார்
x
தினத்தந்தி 7 Aug 2019 11:00 PM GMT (Updated: 7 Aug 2019 8:30 PM GMT)

தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 70 பேரை போலீசார் கோர்ட்டுக்கு சுற்றுலா அழைத்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தர்மபுரி,  

தமிழகம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், போலீசார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்காமல், மன்னிப்பு கடிதம் பெற்று எச்சரிக்கை செய்து அனுப்பினர். இதன் தொடர்ச்சியாக தர்மபுரியில் போலீசார் நேற்று புதிய முயற்சியாக ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து, அவர்களது வாகனங்களை காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு, அபராதம் விதிக்காமல், அவர்களின் விவரங்களை பதிவு செய்தனர்.

அதனையடுத்து பிடிபட்ட 70 பேரை காவல் துறையினர் ஒரு வாகனம் ஏற்பாடு செய்து, சுற்றுலா அழைத்து சென்றனர். இவர்களை தர்மபுரி நகரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள புதிய ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள 11 நீதிமன்றங்களுக்கும் போலீசார் சுற்றுலா அழைத்து சென்றனர். இந்த சுற்றுலா ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி, காவல் துறையினரிடம் சிக்கி நீதிமன்றத்திற்கு அபராதம் செலுத்த சென்றால், அங்கு என்ன நிகழும் என்பதையும், காலதாமதம் ஏற்படுவதையும் உணர வேண்டும் என்ற நோக்கத்தில் அழைத்து செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஹெல்மெட் அணியாதவர்களை காவல் துறையினர் பிடித்து சுற்றுலா அழைத்து சென்ற புதிய முயற்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டியவர்களுக்கு ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகளும், அதனால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்து ஆட்டோக்களில் விழிப்புணர்வு பதாகைகள் காவல் துறை சார்பில் ஒட்டப்பட்டது.

Next Story