வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன், ஏ.டி.எம். கார்டை திருடி நூதன கொள்ளை


வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன், ஏ.டி.எம். கார்டை திருடி நூதன கொள்ளை
x
தினத்தந்தி 7 Aug 2019 10:30 PM GMT (Updated: 7 Aug 2019 8:44 PM GMT)

வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன்கள், ஏ.டி.எம். கார்டை திருடி அதன்மூலம் ஆன்-லைனில் பொருட்களை ஆர்டர் செய்து நூதன மோசடியில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி, 

டெல்லியை சேர்ந்தவர்கள் காளித், பப்லு, ரீகன், நவுசத். இவர்கள் 4 பேரும் சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டம் 5-வது குறுக்குத்தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி, தச்சுவேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். பின்னர் வீட்டில் புழுக்கமாக இருந்ததால் காற்றுக்காக ஜன்னல் கதவைத் திறந்து வைத்துவிட்டு தூங்கினர்.

செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு திருட்டு

நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது ஜன்னல் ஓரம் வைத்து இருந்த 4 பேரின் செல்போன்கள் மற்றும் காளித்தின் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தனது ஏ.டி.எம். கார்டு திருடப்பட்டது குறித்து வங்கிக்கு காளித் தகவல் தெரிவித்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ஆன்-லைன் மூலம் ரூ.16 ஆயிரத்துக்கு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளதாகவும், ரூ.1,600-க்கு ஒரு செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

நூதன கொள்ளை

காளித்தின் செல்போனையும் கொள்ளையன் எடுத்து சென்று இருந்ததால், அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும்போது வரும் ஓ.டி.பி. கடவுசொல்லை (பாஸ்வேர்டை) எளிதாக எடுத்து இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

உடனடியாக வங்கியில் புகார் அளித்து, ஏ.டி.எம். கார்டை முடக்கியதால் வங்கி கணக்கில் மீதம் இருந்த பணம் தப்பியது.

இதுபற்றி அமைந்தகரை போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரீசார்ஜ் செய்யப்பட்ட செல்போன் எண் மற்றும் ஆன்-லைனில் பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்ட முகவரி ஆகியவற்றை வைத்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story