கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை
x
தினத்தந்தி 8 Aug 2019 4:00 AM IST (Updated: 8 Aug 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை நேற்று நடந்தது. பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நேற்று நடந்தது. இதனையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டு அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டது. பின்னர் அந்த நெற்கதிர்கள் கட்டு, கட்டாக கட்டி கன்னியாகுமரி மெயின்ரோட்டில் உள்ள அறுவடை சாஸ்தா கோவிலில் கொண்டு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதன் பிறகு நெற்கதிர்கள் அங்கிருந்து மேள, தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தான மண்டபத்தில் அம்மன் முன் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதனையடுத்து பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் பகவதி அம்மன் தங்க கவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் அம்மன் கோவில் பல்லக்கில் உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.

இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், கோவில் மேலாளர் ஆறுமுக நயினார் ஆகியோர் செய்திருந்தனர்.

இதேபோல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷ பூஜை, நிறை புத்தரிசி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை நடைபெற்றது.

மேலும் மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் தாணுமாலயசாமி, நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை நடந்தது.

Next Story