கிராமப்புற குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நகர்ப்புறங்களில் ரூ.15 ஆயிரம் வெள்ள நிவாரணம் முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு


கிராமப்புற குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நகர்ப்புறங்களில் ரூ.15 ஆயிரம் வெள்ள நிவாரணம் முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 5:03 AM IST (Updated: 8 Aug 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிராமப்புறங்களில் ரூ.10 ஆயிரமும், நகர்ப்புறங்களில் ரூ.15 ஆயிரமும் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.

மும்பை,

மராட்டியத்தில் கனமழை காரணமாக பல நகரங்கள் மற்றும் கிராமப்புற பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதற்கிடையே விரைவில் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ‘மகா ஜனாதேஷ்’ எனும் ரத யாத்திரையை தொடங்கி மக்களை சந்தித்து வந்தார்.

மராட்டியத்தில்வெள்ளப்பெருக்கினால் மக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், முதல்-மந்திரி ரத யாத்திரை மூலம் தேர்தல் பிரசாரம் செய்வது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதைத்தொடர்ந்து, ரத யாத்திரையை தற்காலிகமாக ரத்து செய்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மழை வெள்ள பாதிப்பு குறித்து நேற்று மும்பையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட கலெக்டர்கள்

இதில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கோலாப்பூர், சாங்கிலி, புனே, சத்தாரா, பால்கர், ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுடன் முதல்-மந்திரி வீடியோ-கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். தங்கள் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் குறித்து கலெக்டர்கள் முதல்-மந்திரியிடம் விளக்கம் அளித்தனர். பின்னர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவாரணம்

ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மாதத்தில் மராட்டியத்தில் சராசரியாக 104 சதவீத மழை பெய்துள்ளது. மேற்கு மராட்டியம் மற்றும் கொங்கன் மிக அதிக மழையை பெற்றுள்ளது. கோலாப்பூர் அபாய கட்டத்தில் உள்ளது. ஆனால் மரத்வாடா, விதர்பா பகுதிகளில் வழக்கத்தை விட குறைவான மழை பெய்துள்ளது.

கடந்த மாதம் 26-ந் தேதிக்கு பிறகு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு கிராமப்புறங்களில் ரூ.10 ஆயிரமும், நகர்ப்புறங்களில் ரூ.15 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். 2 நாட்களுக்கு மேலாக வெள்ளத்தில் சிக்கிய வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்படும்.

உத்தரவு

இதற்கிடையே முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேதத்தை கணக்கிடும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.” என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story