குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9½ அடி உயர்வு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு


குமரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை: பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9½ அடி உயர்வு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 2:41 PM GMT)

குமரி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்ததால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9½ அடி உயர்ந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் 2–வது வாரத்தில் இருந்து தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியது. சில நாட்கள் மட்டுமே சாரல் மழை பெய்தது. அதன்பிறகு வழக்கம் போல வெயில் வாட்டி வதைத்தது. இதனால் நெல் பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலையில் இருந்து மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. பின்னர் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 86.6 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது.

மழை அளவு

இதேபோன்று குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

நாகர்கோவில்–52.4, இரணியல்–24.4, ஆனைகிடங்கு–46.4, குளச்சல்–32.2, குருந்தன்கோடு–31.6, அடையாமடை–72, கோழிப்போர்விளை–85, முள்ளங்கினாவிளை–42, புத்தன்அணை–78.6, திற்பரப்பு–58, பூதப்பாண்டி–55.2, சுருளோடு–73, கன்னிமார்–71.2, ஆரல்வாய்மொழி–43, கொட்டாரம்–67 என்ற அளவில் மழை பெய்து இருந்தது. மேலும் அணை பகுதிகளில் பேச்சிப்பாறை–60.4, பெருஞ்சாணி–82.4, சிற்றார் 1–66.4, சிற்றார் 2–46, மாம்பழத்துறையாறு–61, முக்கடல்–73 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

பலத்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் அங்குள்ள சப்பாத்து பாலம் நீரில் மூழ்கிவிட்டது. இதனால் ஒருபுறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் வரை பயணம் செய்து சொந்த ஊருக்கு செல்ல வேண்டி உள்ளது.

இதே போல குற்றியாறு, பரளியாறு, மயிலாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் கால்வாய்களிலும் தண்ணீர் அதிகளவு செல்கிறது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளக்கும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் 495 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்தது. ஆனால் நேற்று நீர்வரத்து அதிகரித்ததால் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 531 கனஅடி தண்ணீர் வருகிறது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது. அதாவது 4.20 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலை 9.20 அடியாக உயர்ந்தது.

இதே போல பெஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 79 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது 31.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 9.60 அடி உயர்ந்து 40.70 அடியாகியது. அதோடு சிற்றார் 1 அணைக்கு 90 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 148 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 7 கனஅடியும் தண்ணீர் வந்தது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து விவசாயத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. அதே சமயம் மாம்பழத்துறையாறு அணையில் இருந்து மட்டும் 15 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மழை காரணமாகவும், அணைகளின் நீர்மட்டம் உயர்வு காரணமாகவும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழைக்கு இடையே குளச்சல் பகுதியில் கடல் சீற்றமும் இருந்தது. இதனால் கடற்கரையில் கயிறு கட்டி நிறுத்தப்பட்டிருந்த 2 விசைப்படகுகளை அலை இழுத்து சென்றது. இதில் 2 விசைப்படகுகளையும் பின்னர் மீனவர்கள் மீட்டனர். இதில் ஒரு படகு சிறிதாகவும், மற்றொரு படகு பெருமளவும் சேதமடைந்தன. தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்ததால் கட்டுமர மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.

தொடர் மழையால் இரணியல்–குழித்துறை இடையே உள்ள தண்டவாளத்தில் நேற்றுமுன்தினம் இரவு மண்சரிவு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் கிடந்த மண்ணை அகற்றினர். இதனால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழியாக செல்லக்கூடிய ரெயில்களும், திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வரக்கூடிய ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டது.


Related Tags :
Next Story