குடிமராமத்து திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்குப்பிறகு 1,689 குளங்கள் தூர்வாரப்படுகிறது


குடிமராமத்து திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்குப்பிறகு 1,689 குளங்கள் தூர்வாரப்படுகிறது
x
தினத்தந்தி 9 Aug 2019 4:15 AM IST (Updated: 8 Aug 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1,689 குளங்கள் தூர்வாரப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக போற்றப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், 22 பேரூராட்சிகள், 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள் உள்ளன. இதில் 589 ஊராட்சிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய குளங்கள் உள்ளன.

இந்த குளங்கள் வடகிழக்கு பருவமழை காலக்கட்டத்தில் மழைநீர் வரத்து வாய்க்கால்கள் மூலம் நிரம்பும். இது தவிர மேட்டூர் அணையில் அதிக அளவில் தண்ணீர் வரும் காலக்கட்டத்திலும் இந்த குளங்களில் நீர் நிரப்பப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்குப்பருவமழை பொய்த்ததின் காரணமாக இந்த குளங்கள் நிரம்பவில்லை. பல குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மழைநீரை சேமிக்கும் வகையில் தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் இன்னொரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களில் 1,689 குளங்கள் தூர்வாரப்படுகின்றன.

இதில் தஞ்சை ஒன்றியத்தில் சித்திரக்குடியில் சாவடிகுளம், ஊர்ணி குளம், இனாத்துக்கான்பட்டியில் மூங்கில்குளம், கொல்லாங்கரையில் பிடாரிகோவில்குளம், செங்குளம், மண்டபகுளம், குருங்குளம் கிழக்கில் வாகரக்கோட்டை குளம், குருங்குளம் மேற்கில் தோழகிரிப்பட்டி குளம், மின்னாத்தூர்குளம் தூர்வாரப் படுகிறது.

குருவாடிப்பட்டியில் பேப்புடையான்குளம், கடகடப்பையில் இடையான்குளம், ராமசாமி அறக்கட்டளை குளம், கொ.வல்லுண்டாம்பட்டில் சுத்தங்குழி குளம், காசாம்பள்ளம் குளம், குருங்களூரில் செல்லியம்மன்கோவில் குளம், பிள்ளையார்குளம், கல்விராயன்பேட்டையில் பிரான்குளம் தூர்வாரப்படுகிறது. கண்டிதம்பட்டில் ஊர்குளம், காசாநாடுபுதூரில் நாவர்பள்ளம் குளம், பிள்ளையார் குளம், கோர்கால்குளம், காட்டூரில் கங்கைகுளம், கூனனிகுளம், குளிச்சப்பட்டில் கொடிஞ்சாட்டை குளம், குமிழன்குளம், மாரியம்மன்கோவிலில் பால்குளம், சுக்கான்குளம், காடவராயன்குளம், மணக்கரம்பையில் மேலக்குளம் ஆகிய குளங்கள் தூர்வாரப்படுகின்றன.

இதே போல் தஞ்சை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு குளங்களும் தூர்வாரப்படுகின்றன. மேலும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், சேதுபாவாசத்திரம், திருவையாறு, பூதலூர், அம்மாப்பேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், திருவோணம், பாபநாசம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள குளமும் தூர்வாரப்படுகிறது.

குளம் தூர்வாருவதற்காக 1 குளத்திற்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள குளத்திற்கு தலா ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் குளங்கள் தூர்வாருவதற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பு 10 சதவீதம் அளிக்க வேண்டும். அதனை அவர்கள் நிதியாக அல்லாமல் உடல் உழைப்பாக அளிக்கவேண்டும். குளங்கள் தூர்வாரும் பணிகள் அனைத்தும் இந்த மாத இறுதியான 31-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த குளங்கள் அனைத்தும் முழுமையாக தூர்வாரப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தற்போது குளங்கள் தூர்வாரப்படுவதுடன், குளத்திற்கு நீர்வரும் பாதை மற்றும் குளிப்பதற்கான படித்துறைகள், கலிங்குகள் உள்ளிட்ட கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குளங்கள் தூர்வாருவதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும் குடிநீர் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். விவசாயிகளுக்கும் இது பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் மழைகாலங்களில் நீர் வீணாகாமல் குளத்தில் முழு கொள்ளளவும் தேக்கி வைக்கப்படும்”என்றார்.

Next Story