காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து , அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து , அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 9 Aug 2019 4:15 AM IST (Updated: 8 Aug 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு செல்லும் பக்தர்கள் அருணாசலேஸ்வரரையும் தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கோவிலில் அதிகமாகவே காணப்படுகிறது.
கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக ராஜகோபுரம், திருமஞ்சன கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம் ஆகிய 4 கோபுர வாசல்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகத்தில் உள்ள முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.

நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பக்தர்களின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கோவிலில் வழக்கமாக 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தோம். தற்போது 4 கோபுர வாசலை சுற்றியும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சுமார் 70 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்றனர்.

Next Story