கீழ்பென்னாத்தூர் அருகே, சீட்டு நடத்தி ரூ.39 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு


கீழ்பென்னாத்தூர் அருகே, சீட்டு நடத்தி ரூ.39 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 6:50 PM GMT)

கீழ்பென்னாத்தூர் அருகே சீட்டு நடத்தி ரூ.39 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை,

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவருடைய உறவினர்கள் அதே கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன், அவருடைய மனைவி பிரேமா, சேஷசயனம், கிருஷ்ணவேணி. இந்த நிலையில் புருஷோத்தமன், பிரேமா ஆகியோர் முருகனை சந்தித்து மாத சீட்டு நடத்தி வருகிறோம். இதில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளனர். இதனால் முருகன் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1 லட்சத்தை தம்பதியிடம் கொடுத்து உள்ளார். மேலும் மாதந் தோறும் தவணை தொகை செலுத்தி வந்துள்ளார். அதேபோல் தம்பதியிடம் அதே கிராமத்தை சேர்ந்த சிலர் சீட்டு கட்டி வந்து உள்ளனர்.

சீட்டு முதிர்வு அடைந்ததும் முருகன் அவருக்கு வர வேண்டிய ரூ.2 லட்சத்தை புருஷோத்தமன், பிரேமா ஆகியோரிடம் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேட்டு உள்ளார். ஆனால் சீட்டு பணத்தை முருகனுக்கு தரவில்லை.

இதுகுறித்து முருகன், புருஷோத்தமனிடம் கேட்ட போது வீடு கட்டி வருகிறோம். தற்போது பணம் இல்லை சில மாதங்கள் கழித்து தருகிறோம் என கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த முருகன், சீட்டு கட்டிய மற்றவர்களிடம் விசாரித்து உள்ளார். அப்போது பலருக்கும் சீட்டு பணம் தராமல் ரூ.39 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு சேஷசயனம், கிருஷ்ணவேணி ஆகியோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முருகன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி புருஷோத்தமன், பிரேமா, சேஷசயனம், கிருஷ்ணவேணி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story