கோட்டூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கோட்டூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 Aug 2019 10:45 PM GMT (Updated: 8 Aug 2019 7:02 PM GMT)

கோட்டூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ளது பனையூர் ஊராட்சி. இங்கு திருப்பத்தூர் தெற்கு தெரு, நடுத்தெரு, வடக்குத்தெரு, காளியம்மன் கோவில் தெரு, வேலைக்காநல்லூர் ஆகிய இடங்களில் 130-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் கடந்த 7 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 500 மீட்டர் தூரத்தில் உள்ளது.

கஜா புயலுக்கு பிறகு இந்த தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கடந்த 7 மாதங்களாகள அந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பக்கத்து ஊர்களுக்கு தினமும் சைக்கிள்களிலும், நடந்து சென்றும் குடிநீரை குடங்களில் எடுத்து வருகின்றனர்.

நடவடிக்கை

குடிநீர் தட்டுப்பாட்டால் பள்ளி-கல்லூரி மாணவர்கள், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையர், பனையூர் ஊராட்சி எழுத்தர் ஆகியோருக்கு பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story