கள்ளக்காதலுக்கு இடையூறு: தொழில் அதிபர் கொலை வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள்தண்டனை


கள்ளக்காதலுக்கு இடையூறு: தொழில் அதிபர் கொலை வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 8 Aug 2019 9:45 PM GMT (Updated: 8 Aug 2019 7:33 PM GMT)

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழில் அதிபரை கொலை செய்த வழக்கில் மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை செசன்சு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சென்னை,

சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் உதயபாலன்(வயது 36). தொழில் அதிபர். இவரது மனைவி உதயலேகா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் பிரபாகரன் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த உதயபாலனை கொலை செய்து விட்டு அவரது சொத்துகளை அபகரிக்க உதயலேகாவும், பிரபாகரனும் சேர்ந்து திட்டமிட்டனர். உதயலேகா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லும் போது, இந்த கொலையை அரங்கேற்ற அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, கடந்த 5.6.2017 அன்று உதயலேகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது சொந்த ஊரான காரைக்கால் டி.ஆர்.பட்டினத்துக்கு சென்று விட்டார்.

திட்டமிட்டபடி அன்றைய தினம் இரவு உதயபாலன் வீட்டுக்கு வந்த பிரபாகரன், அவரை வெட்டி கொலை செய்தார். நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு உதயபாலன் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை பிரபாகரன் எடுத்து சென்றார்.

இதுதொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி இந்த கொலை தொடர்பாக பிரபாகரன், உதயலேகா ஆகியோரை கைது செய்தனர்.

வழக்கு விசாரணையின் போது பிரபாகரன் இறந்து போனார். இதைத்தொடர்ந்து உதயலேகா மீதான வழக்கு விசாரணை சென்னை 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி டி.வி.ஆனந்த் முன்னிலையில் நடந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வக்கீல் டீக்ராஜ் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் உதயலேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு கூட்டு சதி, கொலை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறினார்.

Next Story