துறையூரில் கூலித்தொழிலாளி படுகொலை 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை


துறையூரில் கூலித்தொழிலாளி படுகொலை 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 Aug 2019 3:45 AM IST (Updated: 9 Aug 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

துறையூரில் கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் சவுண்டீஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் மகேஸ்வரன் (வயது 40). கூலித்தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தந்தை மகன் இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மகேஸ்வரன் வீட்டில் இருந்து சத்தம் கேட்டதாக நடராஜனிடம் நேற்று அதிகாலை அக்கம் பக்கத்தினர் கூறினார்கள். உடனே அவர் தனது மகன் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன் இதுபற்றி துறையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மகேஸ்வரன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார், சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகே அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று தெரிய வரும்.

Next Story