திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் அத்திவரதர் அலங்காரம் திரளான பக்தர்கள் தரிசனம்


திருச்சி பெரிய கடைவீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் அத்திவரதர் அலங்காரம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 8 Aug 2019 10:30 PM GMT (Updated: 8 Aug 2019 7:42 PM GMT)

திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் அத்திவரதர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

மலைக்கோட்டை,

திருச்சி பெரியகடை வீதியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கமலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் வாரம்தோறும் கைலாசநாதருக்கு ருத்ராபிஷேகம் நடத்தப்பட்டு, சோமவாரத்தில் கைலாசநாதருக்கு விபூதி அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை கைலாசநாதருக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. பின்னர் திங்கட்கிழமை விபூதி அபிஷேகம் நடைபெற்றது.

இந்தநிலையில் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் சேவை இன்று(வெள்ளிக்கிழமை) 40-ம் நாளாக நடைபெற்று வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அத்திவரதரை தரிசித்து செல்கிறார்கள். ஆனால் பக்தர்கள் அனைவராலும் காஞ்சீபுரம் சென்று அத்திவரதரை தரிசிக்க இயலவில்லை என்று கூறி இங்குள்ள கோவிலில் அத்திவரதர் சேவை நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அத்திவரதர் அலங்காரம்

அதன்பேரில், இந்த கோவிலில் கடந்த திங்கட்கிழமை சுமார் 9 அடி நீளத்தில் சயன கோலத்தில் அத்திவரதர் உருவம் அலங்காரம் செய்யப்பட்டு 3 நாட்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் அலங்காரம் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அத்திவரதர் அலங்காரம் நாளை (சனிக்கிழமை) வரை இருக்கும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.

Next Story