மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது


மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 8:02 PM GMT)

அஞ்செட்டியில் மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா பனைஏரி கோடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 25). விவசாயி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி அஞ்செட்டி மின் பகிர்மான அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அந்த மனுவை பெற்றுக் கொண்ட அந்த அலுவலக மின் வாரிய வணிக ஆய்வாளர் ராஜசேகர் (46) மின் இணைப்பு கொடுக்க ரூ.45 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அந்த தொகையை தன்னால் தர இயலாது என்று கோவிந்தராஜ், அவரிடம் கூறினார். இதையடுத்து ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுப்பதாக ராஜசேகர் கூறினார்.

ஆனால் அந்த லஞ்ச தொகையை கொடுக்க விரும்பாத கோவிந்தராஜ் இது குறித்து கிருஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி, ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.20 ஆயிரத்தை நேற்று விவசாயி கோவிந்தராஜ், மின் வாரிய அதிகாரி ராஜசேகரிடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story