தர்மபுரி மாவட்டத்தில் 5 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்
தர்மபுரி மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள 5 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் பள்ளி, கல்லூரிகளில் நேற்று வழங்கப்பட்டது.
தர்மபுரி,
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. குடற்புழு தொற்று காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, உடல் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, ரத்தசோகை, குமட்டல், வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்படும். குடற்புழுக்களை நீக்க அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் அவசியம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குடற்புழு நீக்க தினத்தையொட்டி 1 வயது முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் முகாம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் நேற்று நடைபெற்றது.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவுப்படி நடந்த இந்த முகாமை தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஸ்குமார் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் முன்னிலை வகித்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் மதிய உணவு சாப்பிட்ட பின்னர் ½ மணிநேரம் கழித்து இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன.
இதுவரை பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் இந்த மாத்திரைகள் வழங்கப்பட்டன. 1 வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ½ மாத்திரையும், 2 வயதுக்கு மேல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 5 லட்சம் பேருக்கு இந்த குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கும் பணி சுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story