இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் விடுதலை


இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் விடுதலை
x
தினத்தந்தி 8 Aug 2019 10:15 PM GMT (Updated: 8 Aug 2019 8:18 PM GMT)

இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தில் கடந்த மாதம் 24-ந்தேதி 147 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முனிவேல் (வயது 55) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவரும், அதே ஊரை சேர்ந்த முனிவேல் மகன் ஸ்டீபன் ராஜ் (31), புஷ்பராஜ் மகன் மணிகண்டன் (28), குமார் (42) ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.

இந்நிலையில் இவர்கள் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்து, அவர்களது விசைப்படகையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி பறிமுதல் செய்தனர்.

விடுதலை

பின்னர் மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின் ஊர்க்காவல்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி 4 மீனவர்களையும் நேற்று வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 4 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த ஊர்க்காவல்படை நீதிமன்ற நீதிபதி யூட்சன் 4 மீனவர்களையும் நிபந்தனையுடன் விடுதலை செய்து உத்தர விட்டார்.

விசைப்படகினை பெறுவதற்கு அனைத்து ஆவணங் களுடன் விசைப்படகின் உரிமையாளர் அக்டோபர் மாதம் 9-ந் தேதி ஆஜர் ஆக வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் படகு அரசுடமையாக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இதனால் விடுதலை செய்யப்பட்ட 4 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட தகவல் ஜெகதாப்பட்டினம் பகுதி மீனவ மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story