கரூர் நகராட்சியில் துப்புரவு பணிக்காக 100 புதிய வாகனங்கள் அதிகாரிகள் தகவல்


கரூர் நகராட்சியில் துப்புரவு பணிக்காக 100 புதிய வாகனங்கள் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 8 Aug 2019 10:45 PM GMT (Updated: 8 Aug 2019 8:24 PM GMT)

கரூர் நகராட்சியில் துப்புரவு பணிக்காக ரூ.2 கோடியே 47 லட்சத்தில் 100 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கரூர்,

கரூர் நகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளை மத்திய, மாநில அரசுகளின் சுகாதார திட்டத்தின் கீழ் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் கிடைக்கும் கழிவுகளை ஒன்று சேர்த்து திடக்கழிவு உர மேலாண்மை செய்ய புதிய திட்டம் வகுத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கரூர் நகராட்சியில் தற்போது 3 இடங்களில் திடக்கழிவு உரமேலாண்மை செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வீடுகள், கடைகள் மற்றும் பொது இடங்களில் கிடைக்கும் கழிவுகளை ஒன்று சேர்த்து நகராட்சி பகுதியை தூய்மைப்படுத்த ரூ.2 கோடியே 47 லட்சத்தில் 85 ஆட்டோக்கள் மற்றும் 15 இலகுரக வாகனம் உள்பட 100 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மேலும் 15 ஆட்டோக்கள் அடுத்தவாரம் வர உள்ளது. பேட்டரியில் இயங்கும் ஒரு ஆட்டோவின் விலை ரூ. ஒரு லட்சத்து 58 ஆயிரம் ஆகும். இலகுரக வாகனத்தின் விலை ரூ.5 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.

பேட்டரியில் இயங்கும்

ஆட்டோக்கள் அனைத்தும் பேட்டரியில் இயங்கும் தன்மை கொண்டவை. ஒரு ஆட்டோவில் மொத்தம் 300 கிலோ எடை வரை எடுத்து செல்லமுடியும். ஒரு ஆட்டோவில் மொத்தம் 6 கூடைகள் இருக்கும் ஒவ்வொன்றிலும் 50 கிலோ அளவில் குப்பைகளை எடுத்து வரமுடியும். ஆட்டோவை ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 கிலோ மீட்டர் ஓடும் தன்மை கொண்டது.

தற்போது புதிதாக வாங்கியுள்ள வாகனத்தை பொதுமக்களும் நகராட்சி நிர்வாகமும் செம்மையாக பயன் படுத்தி தூய்மையான நகராட்சியாக இருக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராஜேந்திரன், உதவி பொறியாளர் நக்கீரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

Next Story