ஸ்ரீரங்கத்தில் தீபா பேரவையை அ.தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி ரத்து சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு


ஸ்ரீரங்கத்தில் தீபா பேரவையை அ.தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி ரத்து சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 8:27 PM GMT)

ஸ்ரீரங்கத்தில் தீபா பேரவையை அ.தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனிடையே சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கம்,

தீபா பேரவையை அ.தி.மு.க.வில் இணைக்கும் நிகழ்ச்சி ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இந்த இணைப்பு நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமார், அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி முன்னிலையி தீபா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.சி.கோபி தலைமையில் ஆயிரம் பேர் இணைவதாக இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் அ.தி.மு.க. ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் டைமன் திருப்பதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் அம்மாமண்டபம் சாலையில் திரண்டிருந்தனர். அவர்கள் கூறுகையில், இந்த இணைப்பு நிகழ்ச்சி குறித்து பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளர்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் அழைப்பும் இல்லை. கட்சியில் நீண்ட நாட்களாக இருப்பவர்களுக்கு பதவி கொடுக்காமல் இன்று புதிதாக வருபவர்களுக்கு பதவி கொடுக்க உள்ளதாக தெரியவருகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் மாவட்ட செயலாளர் குமார் காரை மறித்து இதுகுறித்து நியாயம் கேட்க உள்ளோம் என்றனர்.

இதனால் அம்மா மண்டபம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லை. இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க காத்திருந்த தீபா பேரவை நிர்வாகிகளும், அ.தி.மு.க.வினரும் நிகழ்ச்சி ரத்தான செய்தி கேட்டு வருத்தமடைந்தனர். பின்னர் இந்த இணைப்பு நிகழ்ச்சி வேறொரு நாளில் நடைபெறும் என தீபா பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் ஆர்.சி.கோபி அறிவித்தார்.

மறியலுக்கு முயற்சி

இதையடுத்து இந்த நிகழ்ச்சியை தடுத்த ஸ்ரீரங்கம் பகுதி அ.தி.மு.க.வினரை கண்டித்து தீபா பேரவை நிர்வாகி படையப்பா ரெங்கராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் இது கட்சி பிரச்சினை, இதனை கட்சி தலைமையிடம் பேசி தீர்வு காணுங்கள். பொதுமக்களுக்கு இடையூறு செய்யாதீர்கள் என கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் இதுகுறித்து படையப்பா ரெங்கராஜ் கூறுகையில், நாங்கள் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான். கட்சியை பலப்படுத்தவே நாங்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைகின்றோம். ஆனால் அ.தி.மு.க.வில் ஒரு சிலர் பதவியில் இருக்கும் போது நாங்கள் இணைந்தால் அவர்களுக்கு வருமானம் பாதிக்கும் என கருதி கட்சியை வளர்க்கவும், பலப்படுத்தவும் பாடுபடாமல் தடுக்கின்றனர். இது கட்சிக்கும், மறைந்த ஜெயலலிதாவிற்கும் செய்யும் துரோகம் என்றார்.

Next Story