மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தளி,
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் சுயம்புவாக ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு அருகில் திருமூர்த்தி அணை படகு இல்லம், வண்ண மீன் காட்சியகம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அது மட்டுமின்றி கோவிலின் அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி இருக்கிறது.
இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, வண்டி ஆறு, குருமலை ஆறு கிழவிபட்டி ஆறு, உப்புமண்ணம்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும் இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து நின்று போனதால் பஞ்சலிங்க அருவி முற்றிலுமாக வறண்டு விட்டது. மேலும் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர். அத்துடன் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து விட்டது.
இந்த சூழலில் நேற்று காலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதையடுத்து பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அந்த தண்ணீர் அடிவாரப்பகுதியில் உள்ள கன்னிமார் கோவிலை தழுவியவாறு திருமூர்த்தி அணையை அடைந்தது.
மேலும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் நேற்று தடை விதித்தது. இதனால் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அருவியின் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story