விக்கிரவாண்டி அருகே, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


விக்கிரவாண்டி அருகே, குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2019 4:15 AM IST (Updated: 9 Aug 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே அய்யூர்அகரம் ஊராட்சிக்குட்பட்டது சிந்தாமணி. இந்த கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கிராம மக்கள் பலமுறை போராட்டம் நடத்தினர்.

இதன் விளைவாக அரசு சார்பில் குடிநீர் வழங்க புதிய கிணறு ஒன்று தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணி முடிவடையாமல் காலதாமதம் ஏற்படுவதால் குடிநீர் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் கிராம மக்கள் தினம், தினம் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை சிந்தாமணி பஸ் நிலையம் அருகே முன்னாள் கவுன்சிலர் ரவிதுரை தலைமையில் கிராம மக்கள், காலி குடங்களுடன் திரண்டனர். இவர்கள் அனைவரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், அறவாழி, விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறும்போது, தற்போது புதிய கிணற்றில் இருந்து குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இந்த பணி 2 நாட்களில் முடிந்துவிடும், அதன் பிறகு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி தினமும் தடையின்றி குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் அனைவரும் தங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story