கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு - கலெக்டர் வழங்கினார்


கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 8 Aug 2019 10:45 PM GMT (Updated: 8 Aug 2019 9:08 PM GMT)

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் விஜயலட்சுமி பரிசு வழங்கினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, பேச்சு, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. இதில் ‘வெல்லட்டும் தமிழ்’ எனும் தலைப்பில் கவிதை போட்டியும், ‘இனியொரு விதி செய்வோம்’ எனும் தலைப்பில் கட்டுரை போட்டியும் மற்றும் முப்பது தலைப்புகளில் பேச்சு போட்டியும் நடத்தப்பட்டது.

இதில் கவிதை போட்டியில் கன்னிவாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி மோகனபிரியதர்ஷினி முதல் பரிசும், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவர் சீனிவாசன் 2-ம் இடமும், நத்தம் கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சந்தோஷ்குமார் 3-ம் இடமும் பிடித்தனர். கட்டுரை போட்டியில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி காருண்யா முதலிடமும், இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ஹர்ஷவர்தினி 2-ம் இடமும், சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர் சுஜா 3-ம் இடமும் பிடித்தனர்.

அதேபோல் பேச்சு போட்டியில் சிலுக்குவார்பட்டி ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி மாணவர் கவின்வாரா முதலிடமும், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மாணவி நவிஸ்பாத்திமா 2-ம் இடமும், அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா 3-ம் இடமும் பிடித்தனர். இதையடுத்து வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் விஜயலட்சுமி பரிசுத்தொகை, பாராட்டு சான்று வழங்கினார்.

முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதில் சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் கண்காணிப்பாளர் ஜோதிலட்சுமி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story