பலத்த மழையால் கடும் போக்குவரத்து நெரிசல், கோவை-அவினாசி ரோடு மேம்பால சுரங்கபாதையில் வேன் மூழ்கியது - டிரைவர் மீட்பு


பலத்த மழையால் கடும் போக்குவரத்து நெரிசல், கோவை-அவினாசி ரோடு மேம்பால சுரங்கபாதையில் வேன் மூழ்கியது - டிரைவர் மீட்பு
x
தினத்தந்தி 8 Aug 2019 10:45 PM GMT (Updated: 8 Aug 2019 10:05 PM GMT)

கோவையில் பெய்த பலத்த மழையால் அவினாசி ரோடு மேம்பால சுரங்கப்பாதையில் சென்ற வேன் மூழ்கியது. டிரைவர் உயிருடன் மீட்கப்பட்டார்.

கோவை,

கோவையில் நேற்றுக்காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அனைத்து சாலைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் கோவை அவினாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதையில் மாலை 5.30 மணியளவில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது மேம்பாலத்தின் மேல் பகுதியில் இருந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடி சுரங்கப்பாதை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனால் அதில் தண்ணீர் தேங்கி பெருகியது.

இந்த நிலையில் சுரங்கப்பாதையில் சென்ற வேனின் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மேற்கொண்டு செல்ல முடியாமல் வேன் நின்றது. அப்போது மழைநீர் அதிகம் வந்ததால் வேன் மூழ்க தொடங்கியது. இதனால் அவர் கூச்சலிட்டார்.

இது குறித்து கோவை தெற்கு தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் அங்கிருந்தவர்கள் வேன் டிரைவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வேனின் கதவை திறக்க முடியாததால் அவரை கதவின் மேல்பகுதி வழியாக டிரைவரை உயிருடன் மீட்டு வெளியே அழைத்து வந்தனர். இதற்கிடையில் மழை நீரில் வேன் மூழ்கியது. அப்போது அங்கு வந்த தீயணைப்பு படையினரால் வேனை மீட்க முடியவில்லை. அவினாசி ரோடு மேம்பால சுரங்கப்பாதையில் தற்போது 20 அடி உயரத்துக்கு மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்த நீரை இறைத்து வெளியேற்றினால் தான் வேனை மீட்க முடியும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

கோவை சிவானந்தா காலனிக்கு செல்லும் மேம்பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரில் அந்த வழியாக சென்ற 111 தடம் எண் அரசு பஸ் சிக்கியது. அந்த பஸ்சை மேற்கொண்டு இயக்க முடிய வில்லை. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கி வேறு பஸ்சில் சென்றனர். மேலும் அந்த சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக கோவை கோர்ட்டு வளாகத்தில் வளர்ந்திருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் 23 அடி நீளம் 5 அடி உயர சுற்றுச்சுவர் இருந்தது. நேற்று மாலை 5 மணியளவில் மழை பெய்து கொண்டு இருந்த போது திடீரென்று சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது விவசாயிகள் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்பட வில்லை. கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் வளர்ந்திருந்த ஒரு ஆல மரம் வேரோடு சாய்ந்தது. இதை அறிந்த ஓசை சையது மற்றும் அவரது குழுவினர் விரைந்து சென்று வேரோடு சாய்ந்த ஆலமரத்தை வேருடன் எடுத்து அதே வளாகத்தில் வேறுஇடத்தில் நட்டனர்.

கோவையில் தொடர்ந்து பெய்த மழையால் மாலை முதல் இரவு வரை முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. கிராஸ்கட் சாலை, அவினாசி சாலை, திருச்சி சாலை உள்பட பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஆட்டோ, கார்களின் என்ஜினுக்குள் தண்ணீர் புகுந்ததால் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நின்றது. இதனால் இரவு 10 மணி வரை கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story