இடைக்கால உத்தரவு மாற்றி அமைப்பு, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘சி’ பிரிவு பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


இடைக்கால உத்தரவு மாற்றி அமைப்பு, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘சி’ பிரிவு பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Aug 2019 4:15 AM IST (Updated: 9 Aug 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ‘சி’ பிரிவு பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், இதுதொடர்பான இடைக்கால உத்தரவை மாற்றி அமைத்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைவதற்கு, அந்த பகுதி மக்கள் தங்களது நிலங்களை வழங்கி உள்ளனர். அவர் களுக்கு அணுமின் நிலையத்தில் கல்வித் தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என கடந்த 1999-ம் ஆண்டில் நெல்லை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவானது.

இந்தநிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் அணுமின் நிலையத்துக்கு நிலம் கொடுத்தவர் களுக்கு முன்னுரிமை அளிப்பது பற்றிய தகவல் இடம் பெறவில்லை. எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்துவிட்டு, 1999-ம் ஆண்டின் ஒப்பந்தப்படி நிலம் வழங்கியவர்களுக்கு அணுமின் நிலையத்தின் சி மற்றும் டி பிரிவு பணிகளில் முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, அணுமின் நிலையத்தின் சி மற்றும் டி பிரிவுகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

அடுத்தகட்ட விசாரணையின்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை நிறைவேற்றியது குறித்து கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி பிரிவுக்கான காலிப்பணியிடங்களுக்கு மட்டும் நிரப்ப விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு மாற்றி அமைக்கப்படுகிறது. அதாவது, சி பிரிவு பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் இந்த நியமனங்களின் இறுதி முடிவுகள் கோர்ட்டின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது, என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story