கம்பிவேலியில் சிக்கிய நாயை மீட்க சென்றபோது - மின்சாரம் பாய்ந்து அண்ணன் பலி - தம்பி படுகாயம்


கம்பிவேலியில் சிக்கிய நாயை மீட்க சென்றபோது - மின்சாரம் பாய்ந்து அண்ணன் பலி - தம்பி படுகாயம்
x
தினத்தந்தி 8 Aug 2019 10:00 PM GMT (Updated: 8 Aug 2019 11:01 PM GMT)

திருப்புல்லாணி அருகே கம்பிவேலியில் சிக்கிய நாயை மீட்க சென்றபோது மின்சாரம் தாக்கி அண்ணன் பரிதாபமாக பலியானார். அவரை காப்பாற்ற சென்ற தம்பியும் மின்சாரம் பாய்ந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

ராமநாதபுரம்,

திருப்புல்லாணி அருகே உள்ள வைரவன்கோவில் உமையன்வலசை பகுதியை சேர்ந்தவர் ராஜாங்கம் என்பவரின் மகன் கார்த்திக்(வயது 29).

இவரின் தம்பி கலைச்செல்வன்(26). இவர்கள் இருவரும் திருப்புல்லாணி பகுதியில் காளிதாஸ் என்பவரின் ஹாலோ பிளாக் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இருவரும் வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வேலைபார்க்கும் இடத்தில் கார்த்திக் வளர்த்து வரும் நாய் ஒன்று அங்குள்ள கம்பி வேலியில் சிக்கி கத்தி குரைத்துள்ளது.

இதனைக்கண்ட கார்த்திக் அதனை மீட்க சென்றார். அப்போது கம்பி வேலியில் பாய்ந்திருந்த மின்சாரம் அவரை தாக்கியது. அண்ணனை காணாமல் தேடிக்கொண்டு வந்த கலைச்செல்வன் நாயுடன் அண்ணன் சுருண்டு விழுந்து கிடப்பதைக்கண்டு அவரை மீட்க முயன்றார்.

அப்போது கம்பிவேலியில் கைபட்டு கலைச்செல்வனின் உடலிலும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

அதன் பின்னரே அந்த பகுதியில் அறுந்த கிடந்த மின்கம்பியால் வேலியில் மின்சாரம் பாய்ந்து அதில் நாயும், கார்த்திக்கும் சிக்கி உள்ளது தெரிந்தது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தி கார்த்திக் மற்றும் காயமடைந்த கலைச்செல்வன் ஆகியோரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நாய் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். கலைச்செல்வன் சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறினார். இதுகுறித்து தம்பி கலைச்செல்வன் திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story