மதுரை அருகே கார் மீது லாரி மோதல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி - 2 பேர் படுகாயம்
நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர், அவருடைய மனைவி, மாமியார் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
திருப்பரங்குன்றம்,
சென்னை தாமரைபாக்கம், சி.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 40). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி சைலஜா(38), பரத நாட்டிய ஆசிரியை. இவர்கள், தங்களுடைய மகன்கள் பிரகாஷ், நிதிஷ், சைலஜாவின் தாயார் மல்லிகா(60), உறவினர் மனோஜ் ஆகியோருடன் சென்னையில் இருந்து ஒரு காரில் புறப்பட்டு நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு வந்தனர்.
பரதநாட்டிய நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் 6 பேரும் காரில் சங்கரன்கோவிலில் இருந்து சென்னை நோக்கி சென்று புறப்பட்டனர்.
அவர்களது கார், மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த பரப்புபட்டி-சம்பக்குளம் இடையே நான்கு வழிச்சாலையில் வந்தது. அப்போது காரை ஓரமாக நிறுத்தினர். வெங்கடேஷ், மல்லிகா ஆகியோர் காரில் உட்கார்ந்தபடி செல்போனில் பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. சைலஜா, மகன்கள் பிரகாஷ், நிதிஷ், மனோஜ் ஆகியோர் காருக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று, சாலையோரம் நின்று கொண்டிருந்த வெங்கடேசின் கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரினுள் அமர்ந்திருந்த வெங்கடேஷ், மல்லிகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
மேலும் லாரி மோதியதில் கார் அருகில் நின்றிருந்த சைலஜா, அவரது 2 மகன்கள் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். மனோஜ் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் தப்பினார். இந்த விபத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் காயம் அடைந்தவர்கள், மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சைலஜாவும் இறந்துபோனார்.
இதற்கிடையே விபத்து நடந்ததும் லாரியை ஓட்டி வந்த டிரைவர், அந்த லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story