வன்முறைகளை கட்டுப்படுத்த உதவும்: ராமநாதபுரத்துக்கு புதிதாக வந்துள்ள ‘வஜ்ரா’ வாகனம்


வன்முறைகளை கட்டுப்படுத்த உதவும்: ராமநாதபுரத்துக்கு புதிதாக வந்துள்ள ‘வஜ்ரா’ வாகனம்
x
தினத்தந்தி 9 Aug 2019 10:45 PM GMT (Updated: 9 Aug 2019 3:02 PM GMT)

வன்முறைகளை கட்டுப்படுத்தும் பணியில் உதவுவதற்காக, ராமநாதபுரத்துக்கு புதிதாக ஒரு வஜ்ரா வாகனம் வந்துள்ளது.

ராமநாதபுரம்,

வன்முறை சம்பவங்கள் ஏற்படும் போது அதை கட்டுப்படுத்தவும், கும்பலை கலைந்து செல்ல வைக்கவும், கண்ணீர் புகை குண்டு வீசுவதற்காகவும் வஜ்ரா வாகனம் பயன்படுத்தப்படுகிறது. ராமநாதபுரத்தில் பயன்பாட்டில் இருந்த வாகனம் பழையதாகிவிட்டதால் இதுகுறித்து மாவட்ட காவல்துறையின் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. புதிய வஜ்ரா வாகனம் வழங்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் பேரில் புதிய வஜ்ரா வாகனம் நேற்று ராமநாதபுரம் வந்தது. மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புதிய வஜ்ரா வாகனத்தை போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த வாகனத்தில் 7 கண்ணீர் புகை குண்டுகளை ஒரே நேரத்தில் வீசச்செய்யும் தானியங்கி கருவி பொருத்தப்பட்டுள்ளது.

முற்றிலும் ஜெனரேட்டர் வசதியுடன் அதிவேக ஒளி வசதி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் இதில் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வஜ்ரா வாகனத்தில் ஒரே நேரத்தில் 4 குண்டுகளை மட்டுமே மனித விசையால் வீச முடியும்.

ஆனால், தற்போது தானியங்கி என்பதால் கண்ணீர் புகை குண்டுகளை எந்த திசையிலும் வீசும் சக்தி கொண்டது இந்த வஜ்ரா வாகனம் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story