கோவை பகுதியில் பலத்த மழை: ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது


கோவை பகுதியில் பலத்த மழை: ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது
x
தினத்தந்தி 9 Aug 2019 10:30 PM GMT (Updated: 9 Aug 2019 3:02 PM GMT)

கோவை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததுடன், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது.

சென்னிமலை,

சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் உயரம் 40 அடி ஆகும். அணை கட்டப்பட்ட சில ஆண்டுகளில் திருப்பூர் சாயக்கழிவுகள் அதிக அளவில் நொய்யல் ஆற்றில் கலந்தது.

இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் சாயக்கழிவுகளாக மாறியது. இதன்காரணமாக அணை நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த பல ஆண்டுகளாக அணைக்கு வரும் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

அவ்வப்போது நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரத்துப்பாளையம் அணை நிரம்பும். எனினும் அந்த தண்ணீர் அப்படியே படிப்படியாக வெளியேற்றப்படும்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 50 கன அடியாக இருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 1 அடியாக இருந்தது. கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததுடன் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. நேற்று மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1,290 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 16 அடியாக இருந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 542 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையின் கீழ் மதகில் இருந்து விடப்பட்ட தண்ணீரானது நுங்கும் நுரையுமாக வெளியேறியது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது ஒரத்துப்பாளையம் அணைக்கு சுத்தமான மழை நீர் வந்து கொண்டிருப்பது ஒரு புறம் மகிழ்ச்சியை அளிக்கிறது. எனினும் திருப்பூர் பகுதியில் உள்ள சாயத்தொழிற்சாலைகளில் இருந்து மழை நீரோடு சாயக்கழிவுகளை வெளியேற்றி விடுவார்களோ என்ற கவலையையும் ஏற்பட்டு உள்ளது.

எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருப்பூர் பகுதியில் திருட்டு தனமாக சாயக்கழிவுகளை நொய்யல் ஆற்றில் வெளியேற்றும் தொழிற்சாலைகளை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story