தொண்டி அருகே திடீர் தீவிபத்து


தொண்டி அருகே திடீர் தீவிபத்து
x
தினத்தந்தி 9 Aug 2019 10:30 PM GMT (Updated: 9 Aug 2019 3:04 PM GMT)

தொண்டி அருகே திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர்.

தொண்டி,

தொண்டி அருகே நரிக்குடி கிராமத்தில் குடியிருப்புகளுக்கு அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த விறகுகளில் எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பற்றியது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ வேகமாக பரவி முட்புதர்கள் மற்றும் மரங்களில் பற்றி எரிந்தது.

இதையடுத்து அப்பகுதி மக்கள், திருவாடானை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் நிறைய மரங்கள் கருகின.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவாடானை தாசில்தார் சேகர், மண்டல துணை தாசில்தார் சேதுராமன், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், கிராம நிர்வாக அலுவலர் நம்பு ராஜேஷ் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தீவிபத்துக்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story