திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்-கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2019 10:45 PM GMT (Updated: 9 Aug 2019 5:17 PM GMT)

சுதந்திர தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சுதந்திரதின விழா 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சி ஒன்றிய, தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமசபை கூட்டத்தை கண்டிப்பாக நடத்தவேண்டும்.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளில் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

மேலும் கிராம ஊராட்சி வளர்ச்சித்திட்டம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியை தடை செய்தல், உணவு பொருள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்தும் முழுசுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், சுகாதார உறுதிமொழியை எடுத்துரைத்தல், கழிவறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிவறை இல்லாதோர் விவரப்பட்டியல் தயாரித்தல் வேண்டும்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தல், ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள், பள்ளி கழிவறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிவறைகள், பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலைகளை பாதுகாத்தல், மண்புழு உரம் தயாரித்தல், முழு சுகாதார தமிழகம், ஜல்சக்தி இயக்கம், கழிவறை இல்லாதோர் விவரப்பட்டியல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் 2019-20, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்படவேண்டும். கிராம சபை கூட்டங்களுக்கு பிற துறைகளை சார்ந்த அலுவலர்களையும் கலந்து கொள்ள செய்து அவர்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும் ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story