பசுமை வீடு கட்ட ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் - கலெக்டர் ராஜசேகர் தகவல்


பசுமை வீடு கட்ட ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் - கலெக்டர் ராஜசேகர் தகவல்
x
தினத்தந்தி 9 Aug 2019 10:15 PM GMT (Updated: 9 Aug 2019 5:57 PM GMT)

கிராம பகுதிகளில் பசுமை வீடுகள் கட்ட ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ராஜசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை,

முதல்-அமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் ஏழைகளின் வீட்டு கனவை நனவாக்கும் திட்டம். இந்த திட்டம் தமிழக அரசின் முன்னோடி திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் செலவில் மாநில அரசின் முழுமையான நிதி உதவியுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில் ரூ.1.லட்சத்து 80. ஆயிரம் கட்டுமானத்திற்கும், ரூ.30 ஆயிரம் சூரிய மின் சக்தி விளக்குகள் அமைப்பதற்கும் வழங்கப்படுகிறது.

மானியம் வழங்கப்படுகிறது ஒவ்வொரு வீடும் வசிக்கும் அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகியவற்றுடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் கொண்டிருக்கும்.

இந்த வீடுகள் கட்டுவதற்கான நிதியுதவி நான்கு நிலைகளாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், பயனாளிக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிக்கு ரூ.12 ஆயிரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்துடன் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது. இது தவிர மானிய விலையில் சிமெண்டுமூடைகள், இரும்பு கம்பிகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பயனாளிகளின் தேவைக்கேற்ப வழங்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கான தொகை, பயனாளிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற கிராம ஊராட்சியில் வசிப்பவராகவும், ஏழையாகவும் இருக்க வேண்டும். 300 சதுர அடிக்கு குறைவாக வீட்டு மனை சொந்தமாக வைத்து இருக்க வேண்டும். குடும்பத்தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் பெயரிலோ வில்லங்கமற்ற வீட்டு மனைப்பட்டா இருக்க வேண்டும். மேலும் அந்த கிராம ஊராட்சியில் அல்லது வேறு எங்கும் சொந்த வீடு எதுவும் இருக்கக் கூடாது. அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.

ஒவ்வொரு கிராம ஊராட்சியில் வாழும் ஏழை மக்களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். அதில் மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் துணை ராணுவ படையினர், ஊரகப் பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், எய்ட்ஸ் மற்றும் காசநோய் பாதிக்கப்பட்டவர்கள், தீ விபத்து, வெள்ளம் போன்ற இதர இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை 10 ஆயிரத்து 933 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story