திருவண்ணாமலையில் இருந்து மராட்டிய மாநில தேர்தலுக்காக 2,300 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்ப ஏற்பாடு


திருவண்ணாமலையில் இருந்து மராட்டிய மாநில தேர்தலுக்காக 2,300 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்ப ஏற்பாடு
x
தினத்தந்தி 9 Aug 2019 10:45 PM GMT (Updated: 9 Aug 2019 6:06 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலுக்காக திருவண்ணாமலையிலிருந்து 2,300 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. பின்னர் வாக்கு எண்ணிக்கை கடந்த மே மாதம் 23-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி.பாட் எந்திரங்கள் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள குடோனிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அந்த மாநிலத்துக்கு தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இருந்து கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் வி.வி.பாட் கருவிகள் ஆகியவை அங்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டு கருவிகளும், 2 ஆயிரத்து 370 வி.வி.பாட் எந்திரங்களும் மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனையொட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜானகி முன்னிலையில் திறக்கப்பட்டது.

பின்னர் கட்டுப்பாட்டு கருவிகளில் உள்ள பேட்டரிகள், வி.வி.பாட் கருவியில் பொருத்தப்பட்டுள்ள காகித ரோல்கள் அகற்றப்பட்டு சரிபார்க்கும் பணிகள் தேர்தல் பிரிவு தாசில்தார் முருகன் தலைமையில் நடந்தது. இந்த பணியில் தேர்தல் பிரிவு மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதையடுத்து இன்று (சனிக்கிழமை) இந்த கட்டுப்பாட்டு கருவிகள் மராட்டிய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Next Story