தர்மபுரியில், உள்ளாட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
உள்ளாட்சி பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. முனிசிபல் பொது பணியாளர் சங்கம், கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குவோர், துப்புரவு பணியாளர் தூய்மை காவலர் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மணிவண்ணன் வரவேற்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் மணி, நிர்வாகிகள் மாதேஸ்வரன், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
உள்ளாட்சி பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். திருமண உதவித்தொகை, பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, மருத்துவக்காப்பீடு உள்ளிட்ட உதவிகளை அளிக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான உபகரணங்கள் மற்றும் படியை மாதந்தோறும் வழங்க வேண்டும்.
ஒன்றியங்களில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி இயக்குவோர், துப்புரவு பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலமாக அடையாள அட்டைகளை வழங்க வேண்டும். மாதந்தோறும் 5-ந்தேதிக்குள் ஊதியம் வழங்குவதோடு ஊதிய நிலுவைத்தொகையையும் கணக்கிட்டு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story