வாக்கு எண்ணிக்கை மையம் முன் பட்டாசு வெடித்ததை தடுத்ததால் போலீசாருடன் தி.மு.க.வினர் தள்ளுமுள்ளு


வாக்கு எண்ணிக்கை மையம் முன் பட்டாசு வெடித்ததை தடுத்ததால் போலீசாருடன் தி.மு.க.வினர் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 10 Aug 2019 4:45 AM IST (Updated: 10 Aug 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

கதிர்ஆனந்த் முன்னிலை பெற்றதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையம் முன் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்ததை தடுத்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை,

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை வாலாஜாவை அடுத்த தென்கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. இதனையொட்டி கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை முதல் மதியம் வரை கட்சியினரின் நடமாட்டமின்றி அந்த வளாகம் வெறிச்சோடியே காணப்பட்டது. போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் தி.மு.க.வேட்பாளர் கதிர்ஆனந்த் தொடர்ந்து முன்னிலையில் இருந்ததால் தி.மு.க.வினர் அங்கு கூட்டம் கூட்டமாக வரத்தொடங்கினர். அவரது வெற்றி உறுதியானதை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி அளவில் கல்லூரி நுழைவு வாயில் முன்பு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கூடியிருந்த தி.மு.க.வினர், வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்தவாறும் கோஷம் போட்டவாறும் இருந்தனர்.

அப்போது கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் பணியில் இருந்த போலீசார் தி.மு.க.வினரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தாத வண்ணம் சாலையை விட்டு விலகுமாறு அறிவுறுத்தினர்.

அதற்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு உருவானது.

பின்னர் அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் மற்றும் போலீசாரை கண்டித்து கோஷம் போட்டு விட்டு சாலையோரம் நின்றனர். சிறிது நேரம் கழித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வாக்குஎண்ணும் மையத்திற்கு காரில் வந்தார். அவரது கார் உள்ளே சென்றது. அப்போது வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க.வினர் தொடர்ந்து காரில் வந்தனர். அவர்களை போலீசார் உள்ளே விடாமல் தடுத்தனர். இதற்கும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போதும் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் காரை விட்டு இறங்கிய கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நடந்து சென்றார். இந்த நிலையில் 3 மணியளவில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் வகையில் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து அந்த வழியாக சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story